தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கீழமை நீதிமன்றங்களில் கடந்த 5 நாட்களாக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. வரலாற்றிலேயே அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதிமன்றங்கள் செயல்பட்டதே இல்லை.

கோவை – 06-07-2026
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்களின் பணிக்காலம் கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாததால் கீழமை நீதிமன்றங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தேக்கமடைந்துள்ளதாக கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து கடந்த 60 நாட்களாக உட்கட்சிப் பிரச்சினை, கட்சித் தாவல், குதிரை பேரம், சோபா மாடல், ‘Blast Blast’ போன்ற செய்திகளே ஊடகங்களில் பிரதானமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் இதைத்தான் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என அரசு நினைக்கிறது. ஆனால், நீதிமன்றங்களில் தற்பொழுது மிகப்பெரிய சட்டச் சிக்கல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கீழமை நீதிமன்றங்களில் கடந்த 5 நாட்களாக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. வரலாற்றிலேயே அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதிமன்றங்கள் செயல்பட்டதே இல்லை. இந்தத் தாமதம் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது மட்டுமன்றி, தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது.
கடந்த ஜூலை 2ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, குறிப்பிட்ட 24 வழக்கறிஞர்களை தற்காலிகமாக அரசு வழக்கறிஞர்களாகப் பொறுப்பேற்கச் சொல்லுமாறு கூறியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அரசாணை வெளியாகும் என்று காத்திருந்தோம், ஆனால் இதுவரை எந்த ஆணையும் வரவில்லை.
“அமைச்சர் கீர்த்தனா சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க வந்தபோது, அதற்கான கடிதத்தை எடுத்து வராததால் அவர் பதவியேற்க அனுமதிக்கப்படவில்லை. சட்டமன்றத்திலேயே இத்தகைய கடுமையான நடைமுறைகள் இருக்கும்போது, போதிய அரசாணையோ, ஆவணங்களோ இல்லாமல் மாவட்ட ஆட்சியர் எப்படி வழக்கறிஞர்களைப் பதவி ஏற்கச் சொன்னார்?” என கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
