கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவை நாளை (ஜூலை 7) விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே பலமுறை விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தற்போதைய வழக்கின் தன்மையை முற்றிலும் மாற்றும் நோக்கில் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதூறான கருத்துகளைப் பேசி வருவதாக தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது. இது இந்த வழக்கின் சாட்சிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலாக அமையும் என்றும் தி.மு.க தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை பாதிக்காத வண்ணம் முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து பொது வெளியில் பேசுவதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.