திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய், இன்று அங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் விமான நிலையச் சாலை மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு தொகுதியில் இரண்டாம் கட்டப் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக அவர் இன்று மதியம் 03.05 மணிக்குச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
விமான நிலையத்தில் அவருக்குக் கட்சியின் முக்கிய நிர்வாகியான கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பிரத்யேக பேருந்து மூலம் வெளியே வந்த விஜய், பின்னர் தனது பிரசார வாகனத்தில் ஏறி பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கத் தொடங்கினார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வயர்லஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம் மற்றும் கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின் இடையே வயர்லஸ் சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்ற விஜய், ஆலய வாசலில் இருந்து மண்டியிட்டவாறு சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பிரசார வாகனத்தில் ஏறிய அவர், சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பாதையில் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தும் அவருக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
விஜய்யின் இந்த வருகையையொட்டி திருச்சி விமான நிலையச் சாலை மற்றும் பிரசாரப் பாதைகள் முழுவதும் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தன. காஜாமலை மற்றும் சரம் ஹோட்டல் வழியாக மீண்டும் திருச்சி – புதுக்கோட்டை சாலையை வந்தடைந்த அவர், தனது பயணத்தைத் நிறைவு செய்து விமான நிலையம் திரும்பினார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, திருச்சி மாநகரக் காவல்துறை 27 நிபந்தனைகளுடன் இந்தப் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
