தி.மு.க.வை வீழ்த்த விஜய் ரசிகர்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கை அரசியலில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தி.மு.க ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், விஜய் ஆதரவாளர்களுக்கு ஒரு யோசனையை முன் வைத்துள்ளார்.

நடிகர் விஜய் அதிக வாக்குகளை பெற்றாலும், இந்தத் தேர்தலில் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. எனவே, தி.மு.கவை வீழ்த்த நினைக்கும் த.வெ.க தொண்டர்கள், தங்கள் வாக்குகளை வீணாக்காமல் அ.தி.மு.க. கூட்டணிக்கு (பா.ம.க இடம்பெற்றுள்ள கூட்டணி) வாக்களிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எளிதாக தி.மு.கவை வீழ்த்தி விடலாம் என அவர் தவெக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் வலிமையான சக்தியாகத் திகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது உட்கட்சிப் பூசலால் பிளவுபட்டுள்ளது. ராமதாஸ்-அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கட்சி இரண்டாக உடைந்தது. ராமதாஸ் தரப்பு பொதுவெளியில் அன்புமணி மீது வைத்த விமர்சனங்கள் அவரது பிம்பத்தைப் பாதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அன்புமணி தரப்பு அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இணைந்து செயல்படுகிறது. தற்போது சின்னம் உள்ளிட்ட அதிகாரங்கள் அன்புமணி தரப்பிடமே இருப்பதாகத் தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய், தற்போது திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார். விஜய்யின் வருகையால் பா.ம.க, நாம் தமிழர், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளின் வாக்கு சதவீதம் குறையத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. திராவிட கட்சிகள் மீதான அதிருப்தி, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற மனநிலை போன்றவை விஜய்க்குச் சாதகமாக உள்ளன.

சமீபத்திய சில கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டமன்றம்’ உருவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், விஜய் அதிமுக-வுடன் கைகோர்த்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழல் தி.மு.க தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.