8 மணி வரை அனுமதி; 6 மணிக்கே கிளம்பிய விஜய்… சென்னையில் த.வெ.க பிரசாரத்தில் நடந்தது என்ன?

சென்னையில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ, கூட்ட நெரிசல் காரணமாக எழும்பூர் பகுதியில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. தி.நகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் வாக்கு சேகரித்த விஜய், மாலை 6 மணிக்கே பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தி.நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்திய அவர், கூட்ட நெரிசல் காரணமாக எழும்பூர் தொகுதி பிரசாரத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார்.

இன்று மாலை 4 மணியளவில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய விஜய், சென்னையின் முக்கியப் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். தனது முதல் பிரசார இடமான தி.நகரில், அத்தொகுதி வேட்பாளரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஆனந்தை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று ரோடு ஷோ நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரனுடன் இணைந்து ரோடுஷோ மேற்கொண்டார். எழும்பூர் பகுதியை நெருங்கியபோது வேட்பாளர் ராஜ்மோகனுடன் இணைந்து ரோடு ஷோ நடத்தினார்.

எழும்பூர் தொகுதியில் உள்ள வேப்பேரி ரித்தர்டன் சாலையில் விஜய் பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குறுகிய சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கோடும் வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.