எத்தனையோ தேர்தல்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இது போன்ற அராஜகம் இதுவரை நடந்ததில்லை. கோவை தெற்கு தொகுதியில் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன.

கோவை தெற்குத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அராஜகங்களும், பணப்பட்டுவாடாவும் நடப்பதாகக் குற்றம் சாட்டி, தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அம்மன் அர்ஜுனன் கூறியதாவது:
“தமிழகத்தில் எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன, ஆனால் இது போன்ற அராஜகத்தை நான் பார்த்ததே இல்லை. குறிப்பாகத் தெற்குத் தொகுதியில் அடுக்கடுக்கான அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. காவல்துறையினரால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
பணம் விநியோகிப்பவர்களை நாங்கள் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தாலும், தேர்தல் அதிகாரிகள் அவர்களைத் தப்பவிடுகிறார்கள். கரூரைச் சேர்ந்த 18 பேரைச் சுயேட்சை வேட்பாளர்களாகத் தெற்குத் தொகுதியில் நிறுத்தியதே குழப்பத்தை ஏற்படுத்தத்தான். இன்று இந்தத் தொகுதி ஒரு கலவர பூமியாக மாறியுள்ளது.
