தமிழகத்தில் தேர்தல் நாளான நாளை (23.04.2026) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூரில் 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று நிலவப்போகும் அதிக வெப்பம் மற்றும் புழுக்கம் காரணமாக பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் வந்து வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிடங்களிலும் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும், மற்ற இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
