எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர வழக்கில் ஆஜராவதிலிருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கவும், வழக்கறிஞர்கள் ஆலோசனைகளுக்குப் பின் ஆகஸ்ட் 5-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவதாகவும் கூறி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்டவிரோதமாக பார்களை நடத்தியது மற்றும் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமக்கு முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் உள்ளதாலும், காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாலும், முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.