மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், காவிரி தொடர்பாக புதிய தமிழகம் கட்சி கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல்லைக் கூட கர்நாடக அரசு எடுத்து வைப்பதற்குத் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மேகதாது அணை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, தமிழக அரசைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் மிகத் தெளிவாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார். பாரதப் பிரதமரைச் சந்திக்கும்போதும் சரி, சட்டமன்றமாக இருந்தாலும் சரி, மேகதாது அணையைப் பொறுத்தவரை ஒரு செங்கல்லைக் கூட அங்கே வைப்பதற்குத் தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் சொல்லியிருப்பதாகவும், அதுவே இந்த விவகாரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், அந்த நேரத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்றும் அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து, காவிரி விவகாரம் தொடர்பாகச் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவிருப்பதாகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், புதிய தமிழகம் கட்சி தனிப்பட்ட முறையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், ஆனால் எத்தனை பேர் செல்கிறார்கள் என்பது கூட்டத்திற்குப் பிறகுதான் தெரியும் என்றும் கூறினார். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இயக்கமும் அவர்களது செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு இது போன்ற செயல்களைச் செய்வார்கள் என்றும், பொதுமக்களின் பிரச்சினைக்காக அப்படி வரும்பொழுது அதில் யார் கலந்துகொள்கிறார்கள், யார் கலந்துகொள்வதில்லை என்பது அந்த கூட்டத்தில்தான் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.