விஜய்யின் ஜாதகப்படி இந்தத் தேர்தலில் அவரே வெற்றி பெறுவார். ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை. இது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல, ஜோதிடக் கணக்கீடு என்று பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல், ஒன்இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியில் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து அதிரடியான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஜோதிடர் ராதன் பண்டிட் தனது பேட்டியில், விஜய்யின் ஜாதகப்படி நான் சொல்கிறேன், இந்தத் தேர்தல் ஆட்டத்தில் அவர் நிச்சயமாக வென்று விடுவார். விஜய்தான் அடுத்த முதல்வர், அவரே ஆளும் கட்சியாக வருவார். இது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல, ஜோதிடக் கணிதத்தின்படி நான் சொல்கிறேன். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மாமன்னர்கள் ஜோதிடத்தை பின்பற்றியே செயல்பட்டனர். அந்த வரிசையில் எனது கணிப்பின்படி விஜய் வெற்றி பெறுவது உறுதி.

கடந்த காலக் கணிப்புகளை நினைவுகூர்ந்த அவர், 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், எடப்பாடி பழனிசாமி ஜெயிக்க மாட்டார் என்றும் தான் முன்கூட்டியே வீடியோ வெளியிட்டதாக குறிப்பிட்டார். அதேபோல், 2016-ல் ஜெயலலிதா குறித்துத் தான் சொன்ன கணிப்புகளும் பலித்ததாகத் தெரிவித்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த முறை முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

விஜய்க்கு இருக்கும் ஆதரவு குறித்து பேசிய அவர், தலைவர் விஜய்க்கான ஆதரவு சுனாமி போல உள்ளது. சுனாமி வருவதைக் கூடக் கணித்து விடலாம், ஆனால் விஜய்க்கு இருக்கும் ஆதரவின் அளவைக் கணிக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு சுனாமி போலத் திரண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும்போது இது அனைவருக்கும் புரியும் என்றார்.

த.வெ.க கட்சியின் கொள்கை குறித்துப் பேசிய அவர், நாங்க அரசியலுக்குப் புதியவர்கள், ஆனால் மதச்சார்பற்றவர்கள். எங்களுடைய கொள்கைக்கும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. திராவிட சித்தாந்தமும் ஏறக்குறைய ஒன்றுதான். நாங்கள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கலாம், ஆனால் அதற்கான நேரம் அமையவில்லை. தற்போது கட்சியை முழுமையாகக் கட்டமைக்க அவகாசம் இல்லாவிட்டாலும், மக்களிடம் செல்வதே எங்களது முக்கிய நோக்கம் என்று விளக்கினார். மேலும், விஜய் ஒரு தீவிர முருக பக்தர் என்றும், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள கோவில்களைத் திருப்பதி கோவிலுக்கு இணையாக உலகத் தரத்திற்கு உயர்த்துவார் என்றும், மதப்பாகுபாடின்றிப் பல சேவைகளைச் செய்வார் என்றும் ராதன் பண்டிட் தனது பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.