தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக எ.வ. வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, அவருக்கு எதிராகக் காவல்துறை சார்பில் லுக்-அவுட் நோட்டீஸ் (Look-out notice) பிறப்பிக்கப்பட்டது.
காவல்துறையின் லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து எ.வ. வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
