நெல்லையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவின்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே முன்னாள் மாவட்ட தலைவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவின்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே முன்னாள் மாவட்ட தலைவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கும் இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ராமேஷ்வரன் தலைமை தாங்கினார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு தொடங்கியது. அப்போது, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சங்கர பாண்டியன் மற்றும் உமாபதி சிவன் ஆகிய இருவருக்கு இடையே திடீர் மோதல் வெடித்தது. புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கும் போது முன் வரிசையில் நிற்பது தொடர்பாக இருவருக்குள்ளும் வாய்மொழி வாதம் ஏற்பட்டது.

முதலில் சாதாரண வாக்குவாதமாகத் தொடங்கிய இந்த மோதல், சில நிமிடங்களிலேயே முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சங்கர பாண்டியன் மற்றும் உமாபதி சிவன் ஆகிய இருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் பிற நிர்வாகிகள் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதனால் காங்கிரஸ் அலுவலகமே சிறிது நேரம் போர்க்களமாக மாறியது.

திடீரென ஏற்பட்ட கைகலப்பால் அதிர்ச்சியடைந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மற்ற நிர்வாகிகளும் இருவரையும் தடுத்து சமாதானப்படுத்த முயன்றனர். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் போன்ற முக்கிய நாளில், கட்சி அலுவலகத்திலேயே மூத்த நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.