தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு (ஜூலை 15 முதல் 17 வரை) 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கான மழை மற்றும் வெப்பநிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. காற்றில் அதிக வெப்பமும், ஈரப்பதமும் நீடிப்பதால் கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அசௌகரியமான புழுக்கம் நிலவக்கூடும் என்றும், சென்னை உட்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 15-07-2026 மற்றும் 16-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
17-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
