தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரின் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரின் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தி.மு.க. ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றி வந்த எம். சாய் குமார் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1966 ஆகஸ்ட் 31 அன்று பிறந்த சாய் குமார், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் வயது முதிர்வு காரணமாகப் பணி ஓய்வு பெற இருந்தார். தமிழகத்தில் தேர்தல் மற்றும் நிர்வாகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அவரது பணிக்காலத்தை நீட்டிக்கக் கோரி ஜூன் 3-ஆம் தேதி தமிழக அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது. இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, சாய் குமாரின் பணிக்காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அவர் வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தமிழக தலைமைச் செயலாளராகப் பதவியில் நீடிப்பார்.
