கரூர் த.வெ.க. மாநாட்டு நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த பொதுநல வழக்கை, மனுதாரர் திரும்பப் பெற்றதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கரூர் நெரிசல் விபத்தில் பலியானவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆணைகளை சமீபத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கியிருந்தார். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என். பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் 10 லட்சம் ரூபாயும், த.வெ.க. சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து எந்தவொரு விதியும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
