நீங்கள் சட்டத்தை பின்பற்றவில்லை என்றால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் விளக்கியிருந்தோம்.

விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜன நாயகன் திரைப்படம், பல மாத தாமதங்களுக்குப் பிறகு, வரும் ஜூலை 23 அன்று வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கோரிய குறிப்பிட்ட மாற்றங்கள் குறித்து கே.வி.என் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா முதன்முறையாக பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
என்.டி.வி-க்கு அளித்த நேர்காணலில் வெங்கட நாராயணா பேசுகையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பிற்கும், விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கொள்கை விளக்கத்திற்கும் இடையே தொடர்புபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வசனம் தான் முக்கிய மாற்றங்களில் ஒன்று என்பதை வெளிப்படுத்தினார். “அம்பேத்கரின் அரசியலமைப்பு பின்பற்றப்படாவிட்டால், தவெக-வின் கொள்கை விளக்கமே (அரசியலமைப்பு) பொருந்தும்” என்று கூறுவது போல் தான் அந்த அசல் வசனம் அமைக்கப்பட்டிருந்தது என்று அவர் விளக்கினார்.
அந்த வசனம் தணிக்கை குழுவினர் புரிந்து கொண்டதை விட மிகவும் எளிமையான ஒன்று என்று கே. வெங்கட நாராயணா குறிப்பிட்டார். “நீங்கள் சட்டத்தை பின்பற்றவில்லை என்றால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் விளக்கியிருந்தோம். இது இயல்பான பேச்சு வழக்கு தான். வீட்டில் கூட ஒரு குழந்தையிடம், சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்றால் அடுத்து தண்டனை தான் என்று கூறுவோம் அல்லவா, அதுபோலத் தான். அதில் சில அரசியல் சார்ந்த சொற்கள் இருந்ததால், மாற்றத்தைச் செய்யச் சொன்னார்கள். நாங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்கிறோம். தணிக்கை குழுவினர் எங்கு மாற்றங்களைச் செய்யச் சொன்னார்களோ, அங்கெல்லாம் அந்த மாற்றங்களைச் செய்தோம்” என்றார்.
