வேளச்சேரியில் நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரினுடன் மோதிய ஆட்டம் 47-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி வேளச்சேரியில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கான முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரினுடன் மோதினார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 47-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதனால் இரு வருக்கும் தலா 0.5 புள்ளி வழங்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில், வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய உலக சாம்பியனான குகேஷ், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒரு சிறிய சாதகமான நிலையைப் பெற்றிருந்தார். ஆனால் 13 நகர்வுகளுக்குப் பிறகு ஆட்டம் சமநிலையை எட்டியது; இருப்பினும், குகேஷின் ராணி ‘h6’ கட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ‘g8’ கட்டத்தில் இருந்த நிஹாலின் ராஜாவை குறிவைத்துக் கொண்டிருந்தது.
தனது 17-வது நகர்த்தலுக்கு 20 நிமிடங்களைச் செலவிட்டதால், குகேஷ் நேர அடிப்படையில் 40 நிமிடங்கள் பின்தங்கினார். 19-வது நிஹால் சரினின் கைவசம் ஒரு மணி நேரத்திற்கும் மேலான நேரம் இருந்தது. இதனால், நேர நெருக்கடியால் குகேஷ் சிக்கலில் மாட்டிக்கொண்டு, ஆட்டக்களத்தில் ஏதேனும் தவறு (blunder) செய்யும் அபாயம் உருவானது. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை; இறுதியில் இந்திய வீரர்களான இருவரும் 47 நகர்த்தல்களுக்குப் பிறகு ஆட்டத்தை சமநிலையில் (draw) முடித்தனர். அதனால், இருவருக்கும் 0.5 புள்ளி வழங்கப்பட்டது.
