கடந்த கால முதலமைச்சர்களுக்கு இல்லாத துணிச்சலுடன், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய சமூக நீதிப் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தற்போதைய முதல்வர் விஜய் எடுத்துள்ள துணிச்சலான முடிவைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

சென்னையில் நடந்த பா.ம.க கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த காலங்களில் தமிழகத்தை ஆட்சி செய்த ஐந்து முதலமைச்சர்களைத் தங்களது கட்சிப் பிரதிநிதிகளும், மருத்துவர் ராமதாஸ் ஐயாவும் பலமுறை நேரில் சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய ஐந்து பேரிடமும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதியை வழங்க வேண்டும் என்று எத்தனையோ முறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், அவர்களிடம் ஆட்சி, அதிகாரம் மற்றும் சட்டப்படியான வழிமுறைகள் என அனைத்தும் இருந்தபோதிலும், இந்த கணக்கெடுப்பை நடத்துவதற்கு அவர்களுக்கு மனசு இல்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடக்கத்தில் செய்வதாகத் தன்னிடமும், மருத்துவர் ஐயாவிடமும் நேரில் உறுதியளித்ததாக அன்புமணி தெரிவித்தார். ஆனால், அதன் பின்னர் அரசு அதிகாரிகள் சிலர், “சார் இதெல்லாம் வேண்டாம், இதனால் தேவையற்ற பிரச்சினைகள் வரும்” என்று கூறியதால், அவர் அந்தப் பணியை அப்படியே கைவிட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார். இவ்வளவு காலமும் கடந்த கால ஆட்சியாளர்களுக்குக் கணக்கெடுப்பைக் கொண்டு வருவதற்குத் தைரியம் இல்லாமல் இருந்தது என்பதுதான் உண்மை என்றார்.