முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம், மேகமலை மக்கள் அகற்றம், இனாம் நிலத் தடை நீக்கம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேகமலை விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து பேசினார். மேகமலையில் உள்ள சுமார் 3,000 குடும்பங்களை அப்புறப்படுத்த முந்தைய ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவைக் காண்பித்து தி.மு.க அரசும் நடவடிக்கை எடுத்தது. இந்தச் சூழலில், மேகமலை கிராமங்களில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றக் கூடாது என்று சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் முதலமைச்சர் விஜய்யிடம் திட்டவட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் மற்றும் கருத்துகளைத் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்களில் இனாம் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 9-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்தத் துணிச்சலான முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தங்களது பாராட்டுகளையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். அதே வேளையில், தமிழகம் முழுவதும் இனாம் நிலங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேகமலை மக்களை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்தும், அந்த உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாகவும் முதலமைச்சரின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற இனாம் நிலங்களில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம் செய்யக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசு ஒரு தனி இணையத்தை (ஆணையத்தை) அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், விருதுநகரில் உள்ள ‘பறைச்சேரி’ என்ற கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
