தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு வழக்கை சுகாதாரத்துறை இயக்குநர் சித்ரா தலைமையில் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நெசவு கூலி தொழிலாளர்களிடம் கிட்னி திருட்டு நடந்த சம்பவம் கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில், கிட்னி திருட்டு வழக்கை தமிழக சுகாதாரத்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது. சுகாதாரத்துறை இயக்குநர் சித்ரா தலைமையில் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தொய்வில்லாமல் இந்த விசாரணையை மீண்டும் நடத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கிட்னி திருட்டு சம்பவத்தில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், இடைத்தரர்கள், உள்ளிட்ட யார் தவறு செய்திருந்தாலும்? சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்சி, ஈரோடு மாவட்டங்களைத் தவிர வேறு எந்தெந்த மாவட்டங்களில் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோரிடமும், தமிழகத்தை சேர்ந்த கும்பல் துணையுடன் கிட்னி திருட்டு நடந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியது . இது குறித்து, மகாராஷ்டிரா மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார், திருச்சியில் சில நாட்களாக முகாமிட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு குழுவை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதன்படி திருச்சியில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, திருச்சியில் உள்ள ஸ்ரீதர் மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை புதிதாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசு மீண்டும் கையில் எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய முடிவு செய்துள்ளது.