தமிழக முதல்வர் விஜய் குறித்த லேட்டஸ்ட் செய்திகள், அப்டேட்ஸ்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

மே 4-ந் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறவில்லை. மற்ற கட்சிகளைவிட அதிக இடங்களை த.வெ.க. வென்றது. என்றாலும், த.வெ.க.வினால் அரசை அமைக்க இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 10-ந் தேதி த.வெ.க.வின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர் ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன. என்றாலும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் இன்னும் நடக்கவில்லை. த.வெ.க.விற்கு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யூ.எம்.எல். கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வை ஆதரிக்கின்றனர். ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில், சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 144 ஆக உள்ளது.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் தரப்படுவதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரசில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய 2 பேர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்படுகிறது. அதோடு, அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு, த.வெ.க.வை ஆதரிக்கும் 25 எம்.எல்.ஏ.க்களில் சிலர் அமைச்சரவையில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அவர்களில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்பட 6 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே, காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு, தமிழக அமைச்சரவை விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்த அளவில் முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் இடம்பெறலாம். எனவே மீதமுள்ளவர்கள், த.வெ.க.வில் இருந்து தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இன்று சென்னைக்கு ஆளுநர் அர்லேகர் வருகிறார். நாளை (21-ந் தேதி) புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
