தமிழக அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதை புரிந்துகொள்வதாகவும், விவசாயிகள் சார்பில் அரசு திட்டங்களை செயல்படுத்த தேவையான கால அவகாசத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி ஆர் பாண்டியன் நேரில் சந்தித்து, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகள் மற்றும் நீர்வளப் பிரச்சனைகள் தொடர்பாக 25 அம்சங்கள் கொண்ட விரிவான மனுவை வழங்கினார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் காவிரி, முல்லைப் பெரியாறு, விவசாயக் கடன் தள்ளுபடி, பாசன நீர் மேலாண்மை, பனை மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல முக்கிய விவசாய பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு போன்ற நீர்வழக்கு பிரச்சனைகள் தொடர்ந்து நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால், தமிழக அரசே தனிப்பட்ட சட்ட வல்லுநர்கள் குழுவை அமைத்து அவசரகால சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறினார். குறிப்பாக காவிரி நடுவர் மன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரத்துடன் உருவாக்கப்பட்ட நிலையில், கீழ்பாசன விவசாயிகளின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட முடியாது என்ற தீர்ப்பு இருந்தும், மேகதாட்டு அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இதை தடுக்க தமிழக அரசு மறுசீராய்வு மனுவை விரைந்து தாக்கல் செய்து சட்டரீதியான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட காவிரி நீரை முழுமையாக பெற்றுத்தர காவிரி மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி வழக்கம்போல் திறக்கப்பட்டு டெல்டா பாசனத்திற்கான நீர் விநியோகம் தாமதமின்றி தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் சாகுபடி திட்டமிடல் சிக்கல்கள் மற்றும் நிலத்தடி நீர் தட்டுப்பாடு காரணமாக, காலவரையற்ற தாமதம் விவசாய உற்பத்தியை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.