கிளைமாக்ஸ் காட்சியில் ஏறக்குறைய 900 அடி நீளக் காட்சி மௌனமாக (Silent) இருந்தது. அந்த உச்சக்கட்டக் காட்சிக்குக் காலை 9 மணிக்கு இசையமைக்க வந்த இளையராஜா, அதை முடித்தபோது மறுநாள் அதிகாலை 2 மணி ஆகிவிட்டது. 

பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ஒரே ஒரு படமான ‘முதல் மரியாதை’ படத்தின் கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் சில மாற்றங்களைச் சொல்லியும் பாரதிராஜா அதைச் செய்யவில்லை. ஆனாலும் அந்தப் படத்திற்கு இசையமைத்து, அதை ஒரு பெரிய வெற்றியாக மாற்றிக் காட்டினார் இளையராஜா.

இது குறித்து பேசிய இயக்குனரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன், ‘முதல் மரியாதை’ படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த இளையராஜா, “என்னயா இப்படி பண்ணிட்டியே” என்று பாரதிராஜாவிடம் கேட்டதோடு நிறுத்தாமல், படத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று தனக்குத் தோன்றிய சில கருத்துகளையும் கூறினார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை, தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தன்னுடைய படத்தைப் பார்த்துவிட்டு ஏதாவது கருத்து சொன்னால், அது எந்த நேரமாக இருந்தாலும் சரி, உடனடியாக எடிட்டரை வரவழைத்து அவர்கள் சொன்ன மாற்றங்களைச் செய்து பார்ப்பார்.

அந்த மாற்றம் அவருக்கு திருப்திகரமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வார்; இல்லையென்றால், படம் வழக்கமாக அவர் எப்படி எடுத்திருந்தாரோ அதே பாணிக்கு மாறிவிடும். ஆனால், ‘முதல் மரியாதை’ படத்தைப் பொறுத்தவரை, பஞ்சு அருணாசலம் சொன்னபோதும் சரி, இளையராஜா சொன்னபோதும் சரி, என்ன காரணத்தினாலோ பாரதிராஜா அந்தப் படத்தில் ஒரு பிரேம் கூட அங்கும் இங்கும் மாற்றவே இல்லை. இதற்குப் பின்னரே ‘முதல் மரியாதை’ படம் பின்னணி இசை சேர்ப்புக்காக இளையராஜாவிடம் சென்றது.

இப்போது மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்த இளையராஜா, தான் சொன்ன எந்த மாற்றங்களையும் பாரதிராஜா அந்தப் படத்தில் செய்யவில்லை என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் உடனடியாகப் பின்னணி இசையமைக்கத் தொடங்கினார். ஆனால் படத்தில் தனக்கு பிடிக்காத ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைத்தது போன்ற ஒரு பிரேம் கூட இருக்காது.

அந்தப் படத்தின் கருத்திலோ, அதன் கதையாக்கத்திலோ இளையராஜாவுக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும், தன் உயிரைக் கொடுத்து அந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு படத்திற்கு எப்படி இசையமைப்பாரோ, அந்த அளவிற்கு அர்ப்பணிப்போடு அந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ‘முதல் மரியாதை’ படத்தைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் காட்சியில் ஏறக்குறைய 900 அடி நீளக் காட்சி மௌனமாக (Silent) இருந்தது. அந்த உச்சக்கட்டக் காட்சிக்குக் காலை 9 மணிக்கு இசையமைக்க வந்த இளையராஜா, அதை முடித்தபோது மறுநாள் அதிகாலை 2 மணி ஆகிவிட்டது.