கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் புதிய மாற்றமாக ஒரே நேரத்தில் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஒரு புதிய மற்றும் கவனம் ஈர்க்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின்போது, அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படம் மட்டும்தான் ஆணையர் இருக்கைக்கு அருகே வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில், முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படமும் அங்கு இடம்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதனால், காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, முந்தைய ஆட்சியின் முதல்வருடைய புகைப்படம் மட்டுமே வைக்க வேண்டும் என்ற அரசாணை இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், மு.க. ஸ்டாலினின் புகைப்படம் மட்டுமே கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அந்த அரங்கின் தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. தற்போதைய முதல்வர் விஜய் புகைப்படத்துடன், அதற்கு அருகில் முன்னாள் முதல்வர்களான மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், அரங்கின் வலப்புறச் சுவரில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும், இடப்புறச் சுவரில் பெருந்தலைவர் காமராஜர், பக்தவச்சலம், சி. ராஜகோபாலாச்சாரி ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இவற்றுடன் மகாத்மா காந்தியின் உருவப்படமும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், முன்னாள் முதல்வர்களான வி.என். ஜானகி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் அங்கு இடம்பெறாதது குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இவ்வாறு பல்வேறு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் ஒரே நேரத்தில் இடம்பெற்றிருப்பது அங்கிருந்த உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, அரசியல் வட்டாரங்களிலும் இது தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.