ஊத்தங்கரை தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குதிரை பேரம் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு ஊத்தங்கரையில் நடந்த போது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தது ஏன்? புகாரளித்து 4 நாட்களுக்குப் பின்பே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், புகார் கிடைப்பதற்கு முன்பே ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை இருக்கும் போது, திருவல்லிக்கேணி போலீசார் இதில் தலையிட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.

ஜனநாயக நடைமுறையையும், மக்கள் தீர்ப்பையும் பாதுகாக்க இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை தேவை என வலியுறுத்திய மனுதாரர், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தது. ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இருவரை ராஜினாமா செய்யக் கோருமாறு முதல்வர் விஜய் தெரிவித்ததாக வைகோ அளித்த பேட்டி, தங்களை ராஜினாமா செய்யக் கோரி, அதற்குப் பதிலாக அமைச்சர் பதவியும் 50 கோடி ரூபாயும் தருவதாக ஆளுங்கட்சி அமைச்சர் பேரம் பேசியதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின் மற்றும் சீனிவாசன் தெரிவித்த குற்றச்சாட்டு, கைது செய்யப்பட்ட தன்னை தவெக-வில் இணையுமாறு போலீசார் நிர்பந்தித்ததாக தி.மு.க எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய புகார்கள் விவகாரங்களையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

You missed