மத்திய அரசு திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக நவோதயா பள்ளிகளைத் தமிழகம் மட்டும் ஏன் புறக்கணிக்கிறது? உங்களுக்கென தனிக் கல்வி முறை இருந்தாலும், மத்திய அரசுப் பள்ளிகளைத் தடுக்காதீர்கள் என்று நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தினார்.

பொதுத்தேர்வுக்கு ஓராண்டிற்கு முன்பு புதிய மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, 3-வது மொழியை 9-ம் வகுப்பில் தொடங்காமல், 6-ம் வகுப்பிலேயே தொடங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தமிழகத்தில் ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ (JNV) பள்ளிகளைத் தொடங்க வழிவகை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இந்த முக்கியக் கருத்துக்களை வெளியிட்டது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய இந்த அமர்வு, மத்திய அரசின் திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை எதிர்க்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.

உங்களுக்கு என்று தனியான கல்வி முறை இருக்கலாம், அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் மத்திய அரசுப் பள்ளிகளைத் தடுக்காதீர்கள். ‘இது மத்திய அரசின் திட்டம், நாம் ஏன் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்?’ என்ற மனப்பான்மையை கொண்டிருக்காதீர்கள். தற்போது சி.பி.எஸ்.இ- யின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள், இந்தியத் தலைமை நீதிபதி (CJI) தலைமையிலான மற்றொரு அமர்வின் விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவோதயா பள்ளி வழக்கில் மும்மொழிக் கொள்கை என்பது நேரடியாக பிரச்னையாக இல்லாதபோதிலும், விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் மூன்று மொழிக் கொள்கை குறித்த மாநில அரசின் கவலைகளை நீதிமன்றத்தில் முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதி நாகரத்னா, மத்திய அரசின் கொள்கையின்படி, மாநில மொழி கற்பிக்கப்பட வேண்டும், ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் மற்றும் ஏதேனும் ஒரு மூன்றாவது மொழி கற்பிக்கப்பட வேண்டும். அதில் எங்கும் ஹிந்தி என்று குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தேசியக் கல்விக் கொள்கையானது (NEP) எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது” என்றார். இதற்குக் கேள்வி எழுப்பிய நீதிபதி நாகரத்னா, “உங்களுக்கு ஹிந்தி வேண்டாம், சரி… ஆனால் அது சமஸ்கிருதமாக (Sanskrit) இருந்தால் என்ன பிரச்னை? என்று கேட்டார். 3-வது மொழி 9-ஆம் வகுப்பில் இருந்துதான் கட்டாயமாக்கப்படுகிறது என்ற தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போது, நீதிபதி நாகரத்னா அதற்கு அதிருப்தி தெரிவித்தார். அது மிகவும் தவறான நடைமுறை. 9-ம் வகுப்பு என்பது மாணவர்களுக்கு ஏற்கனவே மன அழுத்தம் நிறைந்த ஒரு காலக்கட்டம். அப்படியிருக்கும் போது ஏன் ஒரு புதிய மொழியை 9-ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்துகிறீர்கள்? அதை 6-ஆம் வகுப்பிலேயே தொடங்கிவிடுங்கள். எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ, அவ்வளவு நல்லது.

தன்னுடைய பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நீதிபதி, நாங்க நடுநிலைப் பள்ளியில் படிக்கும் போதே 3வது மொழி தொடங்கப்பட்டது. ஏனெனில் அது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுக்குத் தேவைப்பட்டது. ஹிந்தியை 2-ம் மொழியாகக் கொண்டவர்களுக்குக் கன்னடமும், கன்னடத்தை இரண்டாம் மொழியாகக் கொண்டவர்களுக்கு ஹிந்தியும் கற்பிக்கப்பட்டது. சமஸ்கிருதமும் ஒரு ஆப்ஷனாக இருந்தது என்று குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசே, தயவுசெய்து 9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைக் கொண்டு வராதீர்கள். சி.பி.எஸ்.இ, ஐசிஎஸ்இ, மாநிலப் பாடத்திட்டம் என எதுவாக இருந்தாலும் 10-ஆம் வகுப்பு என்பது பொதுத்தேர்வு ஆண்டு. 8-ஆம் வகுப்பு முடியும் போதே மாணவர்களுக்கு அழுத்தம் தொடங்கிவிடுகிறது. எனவே புதிய மொழியை 6-ஆம் வகுப்பில் தொடங்குங்கள் என்று வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதை நீதிமன்றம் பதிவு செய்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மட்டுமே, இந்த வழக்கின் சட்டப்பூர்வ தகுதிகள் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக, கடந்த ஜூலை 14 அன்று, இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மூன்று மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டதுடன், இக்கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளுக்காக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களை நீதிமன்றம் பாதுகாக்கும் என்றும் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You missed