முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், ஊழல் தடுப்பு மற்றும் பள்ளி ஆய்வுகளின் போது ரீல்ஸ் எடுக்கக் கூடாது உள்ளிட்ட கடுமையான எச்சரிக்கைகளை அமைச்சர்களுக்கு விடுத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலனுக்காக அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மக்கள் பயன்பாட்டிற்கான பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், அமைச்சர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். தனது தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு முற்றிலும் வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு நிர்வாகமாகச் செயல்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். ஊழலற்ற ஒரு தூய்மையான அரசை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஊழல் புகார்களில் சிக்கும் அமைச்சர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்விதத் தாமதமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் அமைச்சர் பதவி உடனடியாகப் பறிக்கப்படும் என்றும் கறாராகத் தெரிவித்துள்ளார். தவறு செய்பவர்கள் தனக்குத் தெரிந்தவர்களா அல்லது தெரியாதவர்களா என்று எந்தப் பாகுபாடும் பார்க்காமல், தவறுக்குரிய உரிய நடவடிக்கை உடனே பாயும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகக் கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, அமைச்சர்களின் பொதுவெளி செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக, அமைச்சர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் போன்ற சமூக ஊடகக் காணொளிகளைப் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்குச் சென்று வீடியோக்களை எடுப்பதன் மூலம், அங்கிருக்கும் கல்விச் செயல்பாடுகளுக்கும் மாணவர்களின் படிப்பிற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

You missed