பட்டினப்பாக்கத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் தமக்கும் முதலமைச்சருக்கும் இடையே நடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான சந்திப்பின் போது, இந்த இரு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலக வைக்க முதலமைச்சர் கோரியதாக வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்வதற்காகக் குதிரை பேர கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனடிப்படையில், முதலமைச்சர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக ஆளுநருக்குப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநருக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது
”கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் தி.மு.க. வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
தற்போது ஆளும் த.வெ.க. அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகச் செய்வதற்காக, முதலமைச்சர் விஜய், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஜூன் 27, 2026 அன்று சென்னையில் உள்ள விஜய்ஸ்ரீ மஹாலில் நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வைகோ, இச்சதித் திட்டத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். பட்டினப்பாக்கத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் தமக்கும் முதலமைச்சருக்கும் இடையே நடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான சந்திப்பின் போது, இந்த இரு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலக வைக்க முதலமைச்சர் கோரியதாக வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் பதவி விலகினால் இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாகவும் வைகோ பொது மேடையில் பேசியுள்ளார். முதலமைச்சரின் இந்த ஆலோசனையை ஏற்று, வைகோவும் அந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பதவிகளை ராஜினாமா செய்ய வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த இரு எம்.எல்.ஏ-க்களும் அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
வைகோவின் இந்த உரையின் வீடியோ பதிவுகள் மற்றும் பல்வேறு ஊடகங்களின் செய்திகளுக்கான இணையதள இணைப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட புகாரில் ஆதாரங்களாக இணைக்கப்பட்டுள்ளன.
ஆர்.எஸ். பாரதி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
ஆர்.எஸ். பாரதி ஆளுநருக்கு அனுப்பியுள்ள 7 பக்கங்கள் கொண்ட புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“குதிரை பேர சதியில் முதலமைச்சரே நேரடியாக ஈடுபட்டுள்ளார். இது ஜனநாயகப் படுகொலை மற்றும் மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். முதலமைச்சர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலக வைக்க முயன்றுள்ளார். இது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
இந்த சட்டவிரோதக் குதிரை பேர கூட்டுச் சதி குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) உடனடியாக வழக்குப் பதிவு செய்து, முழுமையான விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்று கோரி ஆர்.எஸ். பாரதி புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
முதலமைச்சரே நேரடியாகக் குதிரை பேரப் புகாரில் சிக்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
