இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஆகஸ்ட் 7 வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும், வட தமிழக மாவட்டங்களில் ஆகஸ்ட் 9 வரை மிதமான மழை நீடிக்கும் என்றும் பிராந்திய வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது.

அதேபோல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பிற பகுதிகள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 7 வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிராந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.