நெல்லை கருத்துக் கேட்பு கூட்டத்தில் அறப்போர் இயக்கத்தினர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்வை ‘அறப்போர் இயக்கம்’ கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதியன்று நடத்தியது. வழக்கமான கருத்துக்கேட்பு கூட்டங்களைப் போல் அல்லாமல், மக்களின் பாதிப்புகளை நேரடியாக பதிவு செய்து, அரசிடம் கொண்டு செல்லும் நோக்கில் நடத்தப்பட்டது.

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினர். பொதுமக்களும் கல்குவாரிகளால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். இக்கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. தங்களிடம் எந்த கருத்தும் பெறாமல் அவதூறு பேசுவதாகவும், இதற்காக தங்களிடம் அறப்போர் இயக்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி கைகலப்பு உருவானதால் சலசலப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயற்சி செய்தனர். அப்போது, திடீரென மண்டபத்திற்குள் இருந்த நாற்காலி மற்றும் மேஜைகளை சிலர் தூக்கி வீசினர். அதில், கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷூக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே காவல் துறையினர் கூடுதல் போலீஸை வரவழைத்து இருதரப்பையும் கூட்டம் நடைபெற்ற அரங்கிலிருந்து வெளியேற்றினர்.