தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் நாளை வெள்ளிக்கிழமை தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை முதல் அமைச்சர் விஜய் முன்மொழிகிறார்.

மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு நாளை வெள்ளிக்கிழமை தனித்தீர்மானம் கொண்டு வருகிறது. மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்வர் விஜய். தமிழக அரசின் இசைவின்றி அணைகட்டும் பணியை மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான டி.கே.சிவக்குமார் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ. 715 ஆயிரம் கோடி ஆகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமீபத்தில் மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.

இதன் மீது விரைவாக முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று முதல்வர் டி.கே.சிவக்குமார் பிரதமர் மோடியிடமும், ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர். பட்டேலிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் உபரி நீர் கிடைக்காது என தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று டி.கே.சிவக்குமார் கூறி வருகிறார். த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நடந்த தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையில் மேகதாது திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியுள்ளது.