த.வெ.க கூட்டணிக்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு, முதல் மாநாட்டில் அறிவித்தபடி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என த.வெ.க திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளுநரின் கேள்விகள், கூட்டணி அழைப்புகள் மற்றும் அதிகாரப் பகிர்வு எனப் பல நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் நேற்று உரிமை கோரியிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆளுநரை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநர் தரப்பில் சில முக்கியக் கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் ஆதரவையும் சேர்த்து 112 (1 தொகுதியில் விஜய் ராஜினாமா செய்தால்) உறுப்பினர்களே உள்ள நிலையில், 118 என்ற பெரும்பான்மையை எப்படி எட்டுவீர்கள்? உங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கும் மற்ற கட்சிகள் எவை? இதற்குப் பதிலளித்த தவெக நிர்வாகிகள், சட்டமன்றப் பேரவையிலேயே எங்கள் பெரும்பான்மையை முறைப்படி நிரூபிப்போம் என உறுதி அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி நிர்மல் குமார், கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார். த.வெ.க கூட்டணிக்கு ஆதரவு தரும்கட்சிகளுக்கு, அக்கட்சியின் முதல் மாநாட்டில் அறிவித்தபடி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும். வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள அந்தக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போதைய சூழலில் பா.ஜ.க அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் எண்ணம் ஏதும் இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
