அரபிக்கடலில் மே இரண்டாவது வாரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இதன் காரணமாக பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் விதமாக தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மே 2-வது வாரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது மழையைத் தருவதோடு, பருவமழைக்கான அதிகாரப்பூர்வ தொடக்கமாகவும் அமையும்.
இந்த மாற்றத்தினால், மே 7 முதல் மே 13-ம் தேதி வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் கணவாய் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
