வாக்குப் பதிவு நடைபெற்ற நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 1 மணி வரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில், கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டி இருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 23-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப் பதிவு நடைபெற்ற நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 1 மணி வரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில், கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்த தேர்தல் சமயத்தில் நாங்கள் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், தோல்வி பயத்தில் தி.மு.க தங்களது வழக்கமான ரவுடித்தனத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். சென்னை சைதாப்பேட்டையில் மா.சு தலைமையில் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒரு ரவுடி கும்பல் அந்த தொகுதியின் வேட்பாளர் அவருடன் இருந்தவர்களை தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் மீது நாங்கள் புகார் கொடுத்தோம். அவர்களிடம் இருந்து புகாரை பெற்று போலீசார் எங்கள் மீது வழக்குப் போட்டுள்ளார்கள்.
இதேபோல் எழும்பூரில் எங்கள் வட்டச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுரை தெற்கில் எங்கள் வட்டச் செயலாளர் பார்த்திபன் தாக்கப்பட்டார். திருச்சி கிழக்கில் இரவு ஒரு மணி வரை கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. எங்கள் நிர்வாகிகள் ஆதாரங்களுடன் கொடுத்த எந்தப் புகாருக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாவில்லை. இது கடும் கண்டனத்துக்குரியது. அதிகாரிகள் இனியாவது திருந்தி தி.மு.க-விற்கு துணை போவதை விடுத்து பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும்.
