தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை அருகே வாக்குச்சாவடியைப் பார்வையிடச் சென்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், நிறைமாத கர்ப்பிணியுமான அனீஸ் பாத்திமா (25) ஒரு கும்பலால் கீழே தள்ளிவிடப்பட்டு, செங்கற்களால் தாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்று முடிந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா (25) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான அனீஸ் பாத்திமா, நேற்று மாலை அம்மாப்பேட்டை அருகே உக்கடை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியைப் பார்வையிடச் சென்றார். அப்போது அங்கு திரண்ட ஒரு கும்பல், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கீழே தள்ளிவிட்டு செங்கற்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து மயக்கமடைந்த அவர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து அனீஸ் பாத்திமாவின் கணவர் ஷேக் அம்சத் அலி கூறுகையில், “வாக்குச்சாவடிக்குள் திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பேட்ஜ் அணிந்து அமர்ந்திருந்தனர். இது குறித்து நாங்கள் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியபோது, அங்கிருந்தவர்கள் ஆபாசமாகப் பேசி எனது மனைவியைக் கீழே தள்ளி செங்கற்களால் தாக்கினர். ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் இழைக்கப்பட்ட இந்த அராஜகத்தால் அவரது உயிருக்கும், கருவில் இருக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது,” என வேதனையுடன் தெரிவித்தார். இத்தகவலை அறிந்து ஏராளமான நாதக நிர்வாகிகள் மருத்துவமனையில் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இந்த கொடூரத் தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான, தங்கை அனீஸ் பாத்திமா அவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடூரமானத் தாக்குதல் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. 

நீங்க விரும்பும் செய்திகள்

முதல்முறை விமானப் பயணம்: ஆதரவற்ற குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கிய கோவை தன்னார்வலர்கள்

வாக்களிக்க சொந்த ஊருக்கு படை எடுத்த இளைஞர்கள்: ‘டி.வி.கே’ கோஷத்தால் அதிர்ந்த கிளாம்பாக்கம்

லண்டன் ரிட்டர்ன், தெனாவட்டு ரொம்ப அதிகம்; பாரதிராஜா படத்தில் ராதிகா நாயகி ஆனது எப்படி?

மாற்று அரசியல் கருத்துகளை எதிர்கொள்ளத் துணிவில்லாத திமுகவினர், ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், மனிதாபிமானமற்ற முறையில் வன்முறையை ஏவி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசியல் நாகரிகம் என்பது பெண்களை மதிப்பதிலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலுமே அடங்கியுள்ளது. ஆனால், அதிகார மமதையில் திமுக கட்சியினர் பெண் வேட்பாளரை, அதுவும் ஒரு கருவுற்றத் தாயின் மீது தாக்குதல் நடத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது, நாகரிகச் சமூகத்தின் தலைகுனிவாகும். 
கருவில் இருக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஒரு சாதாரண அரசியல் மோதல் அல்ல. இது மிக மோசமான மனித உரிமை மீறல்.

சனநாயக ரீதியாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கவலையளிக்கிறது.
இந்த அராஜகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, தங்கை அனீஸ் பாத்திமா அவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.