தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர் அனுமதியின்றி போலீசார் உள்ளே நுழையக் கூடாது என டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு தொடர்ந்து வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்பு விதிகள் தொடர்பாகத் தமிழக டி.ஜி.பி சந்திப் ராய் ரத்தோர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் (Polling Booths) நுழையக்கூடாது. வாக்குச் சாவடி தலைமை அலுவலரின் (Presiding Officer) முறையான அனுமதி இருந்தால் மட்டுமே போலீசார் உள்ளே செல்ல வேண்டும். காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று தங்களது கடமையை ஆற்ற வேண்டும். இந்த உத்தரவு குறித்து மண்டல ரோந்து பிரிவினர், வயர்லெஸ் கருவிகள் மூலம் காவலர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் அல்லது பணியில் கவனக்குறைவாக இருப்பவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய மாவட்ட எஸ்பிக்கள் (SP), காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள் மற்றும் சரக டிஐஜிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். வாக்குப்பதிவு இன்னும் சில மணி நேரங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டும் நடப்பதை உறுதி செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது