தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி; அ.தி.மு.க கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவையில் வாக்கு செலுத்திய பின் பேசிய அவர் இதனை கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். கோவை சுகுணாபுரம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்த அவர், வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும். குறிப்பாக, 210 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தற்போது உறுதியாகி உள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகள் மற்றும் அவிநாசி தொகுதி என மொத்தம் 11 இடங்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும். இதேபோல் நீலகிரி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றும். மக்கள் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பேரார்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
