சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்களைக் கேலி செய்து முகபாவனை காட்டிய வீடியோ வைரலானதை அடுத்து, இனி இதுபோன்ற கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஸ்ட்ரிக்டாக எச்சரித்துள்ளார்.

உறுப்பினர்களைக் கேலி செய்து முகபாவனைகள் மற்றும் சைகைகளில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது கடுமையான உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் எச்சரித்துள்ளார். சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால், பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேரவையில் சில உறுப்பினர்கள், அவையில் உள்ள மற்ற உறுப்பினர்களை கேலி செய்யும் வகையில் செய்த முக பாவனைகள் மற்றும் சைகை மொழிகள் பேசியவை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த செயலானது சட்டமன்றப் பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் குறைக்கும் வகையிலான ஒரு செயலாகும் என்று சபாநாயகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பிற சட்டமன்றப் பேரவைகளுக்கு எடுத்துக்காட்டாகவும், நூற்றாண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட இந்த மாமன்றத்தின் மரபினை காத்திடும் வகையிலும், அதன் கண்ணியத்தினையும் மாண்பினையும் உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் பேரவையின் சில நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. எனவே, மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களது பொறுப்பினையும் கடமையினையும் உணர்ந்து, இதுபோன்ற கண்ணியக் குறைவான செயல்களில் இனிவரும் காலங்களில் ஈடுபடக்கூடாது என சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற கண்ணியக் குறைவான செயல்கள் அவையில் தொடர்ந்து நீடித்தால், அந்தச் செயல் அவையின் உரிமை மீறலாகக் கருதப்படும் என்றும், அவ்வாறு அவையின் உரிமை மீறலில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் எச்சரித்துள்ளார்.
