ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் மீது மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரணை கோரி, அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில், தே.மு.தி.க பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு 2.10 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி, அதில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு வழங்குவதாகக் கூறி, தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளை போலியான கையொப்பமிட்டு சந்தோஷ் ஷர்மா ரூ. 43 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் சந்தோஷ் ஷர்மா கைது செய்யப்பட்டார். இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கிய பலருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் ஷர்மா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் தங்களுடைய மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மகளை கவனித்துக் கொள்வதற்கு சந்தோஷ் ஷர்மாவுக்கு பிணை வழங்க வேண்டும், குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, சந்தோஷ் ஷர்மாவின் மனைவி கல்பனா ஷர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையரும், தற்போதைய ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமான அருண் ஐ.பி.எஸ்-ஸை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த மாதம் 29-ம் தேதி அன்று, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அருண் ஐ.பி.எஸ் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி உத்தரவிட்ட சம்மனை, அவரின் அலுவலகத்துக்கு வழங்கச் சென்ற நீதிமன்ற நீதிமன்ற பிரதிநிதியை 2 மணி நேரம் காக்க வைத்திருக்கின்றனர். இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தின் பிரதிநிதியை காக்க வைத்த உதவியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அருண் ஐ.பி.எஸ் நீதிமன்றத்திலேயே காத்திருக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
