“ம.தி.மு.க-வை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்கள் கட்சி கிடையாது. அவர்கள் எங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்து, அதன் பின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள்.” என்று துரை வைகோ தெரிவித்தார்.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வருகை தந்த ம.தி.மு.க முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன். தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். பல துறைகளில் சில தவறுகள் நடந்ததன் காரணமாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இந்த சூழலில் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை புதிய திட்டங்கள் நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள்.
அ.தி.மு.க-வில் எம்.எல்.ஏக்களாக தேர்வானவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தான் த.வெ.கவில் இணைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் விலகுவது ஏன்? என்பதை அ.தி.மு.க தலைமை தான் ஆராய வேண்டும். பா.ஜ.க போல் த.வெ.க-வும் வாஷிங் மெஷின் என்கிற விமர்சனத்தைப் பொறுத்தவரை, குதிரை பேரம் விமர்சனம் அனைத்து கட்சிகள் மீதும் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்கள் த.வெ.கவில் இணையும் போது த.வெ.க தலைமை கவனத்துடன் இருக்க வேண்டும்.
