தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை (2026-2027) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை இன்று (05-08-2026) தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் பிரத்யேக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு புதிய திட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தவெக அரசின் இந்த முதல் நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை முதன்மைச் செயலாளர் சித்திக், 2026-27 நிதியாண்டு பட்ஜெட் கணக்கீடுகள் மற்றும் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து விரிவாக விளக்கமளித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,  மாநிலத்தின் மொத்த சொந்த வரி வருவாய்: ரூ. 2,26,740 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வரி அல்லாத சொந்த வருவாய் ரூ. 27,835 கோடி, மத்திய அரசின் வரிப் பகிர்வு ரூ. 2,531 கோடி, மத்திய அரசு தரும் மானியங்கள் மற்றும் பகிர்வுகள் ரூ. 32,922 கோடி, ஒட்டுமொத்த வரி வருவாய் ரூ. 3 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

வருவாய் கணக்கில் இருந்து செலவு செய்யப்படும் தொகை ரூ. 4,05,802 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. செலவு அதிகமாக உள்ளதால் வருவாய்க் கணக்கில் பற்றாக்குறை ரூ. 55,775 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மூலதனக் கணக்கில் செலவுகள் ரூ. 56,985 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த பற்றாக்குறை ரூ. 1,22,000 கோடி (1.22 லட்சம் கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது.