தமிழ்நாடு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் தொழில்முனைவை மேம்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் முக்கிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு முக்கிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இளைய தலைமுறையினரிடையே தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ மூலம் மூலதன மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை விரிவாக மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் ‘அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்’ தொடங்கப்பட்டு, அதற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், குடிநீர், தெருவிளக்குகள், சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கத்துடன் ‘மண்ணின் மகள்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு விவசாயம் செய்வதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும் என்பதோடு, திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவை தவிர, ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டத்திற்கு ரூ.25,225 கோடியும், பழங்குடியினருக்கான துணைத் திட்டத்திற்கு ரூ.2,079 கோடியும், சமூகநீதித் துறைக்காக மொத்தமாக ரூ.3,937 கோடியும் கூடுதல் ஒதுக்கீடுகளாக வழங்கப்பட்டுள்ளன. சமூகநீதியை வெறும் சொல்லாக அல்லாமல் செயலில் காட்டும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
