காவிரி விவகாரத்தில் அரசின் தோல்வியை மறைக்கவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார் என விமர்சித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்” என்று த.வெ.க அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் உதயநிதிக்கு எதிரான இந்த கைது நடவடிக்கை த.வெ.க அரசின் பாசிசத் தன்மையையே காட்டுகிறது என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு த.வெ.க அரசின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிராக அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்து, எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினை தஞ்சை காவல்துறையினர் நீலாங்கரை இல்லத்தில் வைத்து இன்று (04.08.2026) கைது செய்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க-வினர் த.வெ.க அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருதால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ,அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்,  கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும். மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனால், விசாரணைக்காக தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்குப்பின் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு த.வெ.க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் “ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்” என்று தலைப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.