ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் 2,000 பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவுசெய்​துள்​ளது. இதுதொடர்​பான அறி​விப்பு இம்மாதம் வெளி​யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை விரைவில் நியமிக்கப் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆகஸ்ட் மாத மத்தியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதற்கான போட்டித்தேர்வுகள் வரும் நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், இந்த பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் தேர்வைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தேர்வில் 30 வினாக்கள் இடம்பெறும். கட்டாயத் தமிழ் மொழித் தாளில் தேர்வர்கள் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். தமிழ் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி மெரிட் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றாலும், இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வரின் முதன்மைப் பாடத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலமாகவே நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வட்டார கல்வி அலுவலர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், அரசு கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களும் டி.ஆர்.பி வாயிலாகவே நிரப்பப்படுகின்றன.

தற்போது அரசுப் பள்ளிகளில் 18,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கற்பித்தல் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. இருப்பினும், நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடைசியாக, கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் 2,582 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.