காசோலை மோசடியில் ஈடுபட்ட திருச்சி போக்குவரத்து தலைமை காவலர் ரவிக்கு ஓராண்டு கால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி, கருமண்டபத்தை சார்ந்தவர் மனோகர். இவரிடம் திருச்சி மாநகர காவல்துறையில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் ரவி என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு கடனாக ரூபாய் 5 லட்சம் வாங்கியிருந்தார். மேற்படி கடன் தொகையை திருப்பி தரும்பொருட்டு காசோலை ஒன்றை மனோகரிடம் கொடுத்துள்ளார். ஆனால், காசோலையில் பணமில்லாமல் திரும்பியுள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மனோகர் திருச்சிராப்பள்ளி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3-ல் ரவிக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கிற்கான தீர்ப்பு ஜூலை 30-ஆம் தேதி நீதிபதி முகமது சுகைல் என்பவரால் வழங்கப்பட்டது. அதன்படி, காசோலை மோசடி வழக்கில் தலைமைக் காவலர் ரவி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, அவருக்கு ஓராண்டு கால சிறை தண்டனையும், புகார்தாரருக்கு கொடுக்க வேண்டிய காசோலை தொகையை அபராதமாக விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
