அதன்படி, போலி தங்கக்கட்டியின் ஒரு பகுதியில் ‘குயிக் பிக்ஸ்’ (Quick Fix) பசையைத் தடவி, அதன் மேல் உண்மையான தங்கத்தை ஒட்டியுள்ளனர். பின்னர், சரண்யா முன்னிலையில் அந்தப் பகுதியை மட்டும் உடைத்துக் கொடுத்துச் சோதனை செய்ய வைத்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கக்கட்டிகளைக் கொடுத்து, நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து ஏமாற்றிப் பறிக்கப்பட்ட சுமார் 7.5 பவுன் தங்க நகைகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் ‘வி.எஸ். ஜூவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு அறிமுகமான சரண்யா என்ற பெண், கடந்த ஜூன் 23-ஆம் தேதி உதயகுமாரைச் சந்தித்துள்ளார். அப்போது, தனக்குத் தெரிந்த இருவர் 380 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியை விற்க விரும்புவதாகவும், அதில் ஒரு சிறிய துண்டு தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உதயகுமார் அந்தத் துண்டைச் சோதனை செய்தபோது அது அசல் தங்கம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, முழு தங்கக்கட்டியையும் வாங்கி வருமாறு சரண்யாவிடம் அவர் கூறியுள்ளார்.
நகை பறிக்கப்பட்ட விபரீதம்:
மறுநாள் அந்த இரு நபர்களும் சரண்யாவைச் சந்தித்து 380 கிராம் தங்கக்கட்டிகளைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ₹10 லட்சம் கேட்டுள்ளனர். சரண்யா இதுகுறித்து உதயகுமாரிடம் பேசியுள்ளார். அப்போது உதயகுமாரிடம் போதிய பணமில்லாததால், தன்னிடம் இருந்த 6 1/2 பவுன் நகைகளையும், சரண்யாவின் 1 பவுன் தங்கச் சங்கிலியையும் சேர்த்து அந்த நபர்களிடம் கொடுத்து, பணத்தைக் கொடுத்த பிறகு நகைகளைத் திருப்பிக் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி அனுப்பியுள்ளார். சரண்யாவும் அந்த நகைகளை இருவரிடமும் ஒப்படைத்துள்ளார்.
அதன்பின்னர், உதயகுமார் அந்த தங்கக்கட்டிகளை முழுமையாகச் சோதித்தபோது, அவை அனைத்தும் போலி தங்கக்கட்டிகள் என்பது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உதயகுமார், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
