பழனி நில விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி இன்று பல இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது. இதையடுத்து, டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி குழுவினர் பழனியில் கள ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மயில்சாமி, சிவக்குமார் மற்றும் போலி பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு அதற்கு சாட்சியாக கையொப்பமிட்ட தி.மு.க வார்டு செயலாளர் சேதுபதி, லட்சுமணம் ஆகியோர் இல்லங்களில் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் இன்று சி.பி.சி.ஐ.டி சோதனை நடத்தியது.

காலை 7 மணிக்கு முதல் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இதில், ஏறத்தாழ முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் முக்கிய பிரமுகர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது. 

அதேபோல், நெல்லையில் இரண்டு இடங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றுள்ளது. பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் 6 மணிநேரம் சோதனை நடைபெற்றுள்ளது. இதில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.