இந்த ஆய்வில், கூகுள் பே தளம் மூலமாக மொத்தம் ஏழரை லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டது உறுதியானது. இதில் தாலுகா என்ஜினியர் என்பவர்தான் மிக அதிக அளவில் டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கூகுள் பே (Google Pay) செயலி மூலமாக சுமார் 7.5 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக துணை தாசில்தார் உட்பட ஐந்து அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் தாலுகா அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையைத் தொடங்கினர். சோதனை நடைபெற்ற சமயத்தில் தாசில்தார் ஜெயக்குமார் உட்பட பல அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தனர்.

முடக்கப்பட்ட அலுவலகம் – செல்போன்கள் ஆய்வு:

சோதனை தொடங்கியவுடன் அலுவலகக் கதவுகள் பூட்டப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்லவும், வெளியில் இருந்தவர்கள் உள்ளே வரவும் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு அறையிலும் உள்ள மேஜைகள், டிராயர்கள் மற்றும் கோப்புகளில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் தீவிரமாக தேடினர்.

ரொக்கப் பணம் மட்டுமின்றி, டிஜிட்டல் முறையிலும் லஞ்சம் பெறப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அங்கிருந்த அதிகாரிகளின் செல்போன்களை போலீசார் வாங்கி ஆய்வு செய்தனர்.

டிஜிட்டல் லஞ்சம் அம்பலம்:

சோதனையின் போது மூன்று ஊழியர்களின் செல்போன்களில் கூகுள் பே மூலம் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து துணை தாசில்தார், தாலுகா இன்ஜினியர், வருவாய் ஆய்வாளர் (RI), கிராம நிர்வாக அதிகாரி (VAO), அலுவலக உதவியாளர் உட்பட 6 பேரின் கூகுள் பே கணக்குகளை போலீசார் முழுமையாக ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், கூகுள் பே தளம் மூலமாக மொத்தம் ரூ.7,50,000 (ஏழரை லட்சம் ரூபாய்) லஞ்சமாகப் பெறப்பட்டது உறுதியானது. இதில் தாலுகா என்ஜினியர் என்பவர்தான் மிக அதிக அளவில் டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தவிர, கணக்கில் வராத ரூ.5,000 ரொக்கப் பணமும் அலுவலகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

WhatsApp Image 2026-07-18 at 11.04.15 AM