கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தொழிலாளர்கள் வசித்து வந்த அடுத்தடுத்த 4 ஓட்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் நேற்று இரவு (ஜூலை 17) அடுத்தடுத்து 2 வீடுகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் அடுத்தடுத்து இருந்த 4 ஓட்டு வீடுகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையாகின. நல்வாய்ப்பாக பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கோவை துடியலூர் அடுத்த தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் தொழிலாளர்கள் வசிக்கும் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இங்கு தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் வாடகைக்குக் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், இங்குள்ள ஒரு வீட்டில் நாகராஜ் என்பவர் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வீட்டு எரிவாயு சிலிண்டரில் (Gas Cylinder) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றிக் கொண்டது.
