அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்,  மருத்துவ குழுவும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இன்று (21.06.2026) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர். இவ்விபத்தில் துரதிஷ்டவசமாக 2 பெண்கள் உயிரிழந்துவிட்டனர். 15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.